சிறந்த குழந்தைகள் திரைப்படங்களை வழங்கி வரும் CFSI

A Child’s Right to Entertainment – Children’s Film Society, India

எந்த ஒரு ஊடகத்தைக் காட்டிலும் திரைப்படமானது சிறுவர், சிறுமிகளை அதிகம் பாதிக்கக் கூடியவையாக உள்ளது.  இந்த உண்மையை புரிந்து கொண்டு CFSI பல்வேறு சிறந்த குழந்தைத் திரைப்படங்களை வழங்கி வருகிறது.

“Karamati Coat” (மந்திர கோட்)

அண்மையில் பள்ளிக் குழந்தைகளுடன் சேர்ந்து “Karamati Coat” (மந்திர கோட்) என்ற தமிழாக்கம் செய்யப்பட்ட படத்தை பார்த்தோம். குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் அந்த படத்தைக் கண்டு ரசித்தனர். கதை இதுதான்

தாய், தந்தையை இழந்த, தனது அக்காவுடன் (தனது மாமாவின் கொடுமைகளுக்கிடையில்) வசித்து வரும் ஒரு சிறுவனுக்கு ஒரு மந்திர கோட் கிடைக்கிறது. அந்த கோட்டிலுள்ள பையில் எடுக்க, எடுக்க ஒரு ருபாய் காசுகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. அந்த கோட்டிலிருந்து வரும் பணத்தைக் கொண்டு அவன் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறான் என்பதையும், பின்னர் அந்த பணமே அவனுக்கு இடைஞ்சலாக மாறி விடுகிறது. ஒரு நிலையில் அவன் கோட்டை மீண்டும் கடலிலேயே விட்டெறிந்து விடுகிறான். குறுக்கு வழியில் கிடைக்கும் பணம் நிலையில்லாதது என்பதை படம் நகைச்சுவையுடன் விறுவிறுப்பாக சொல்கிறது.

Hayat

அதை விட அருமையாக இருக்கிறது ஹயாட் எனும் ஈரானிய மொழி திரைப்படம்.  ஹயாட் எனும் 12 வயது சிறுமியின் கதை இது. முக்கியமான தேர்வு நாளன்று, அவளது அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவளது தம்பியை பார்த்துக் கொள்வதற்காக வீட்டில் அமர்த்தப்படுகிறாள் ஹயாட்.  தம்பியையும் பார்த்துக் கொள்ள வேண்டும், தேர்வும் எழுத வேண்டும் என அவள் மேற்கொள்ளும் முயற்சிகளை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறது. ஒரு பெண் குழந்தை தனது கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது அது அடையும் இன்னல்களை படம் கோடிட்டுக் காட்டுகிறது. அவசியம் பார்க்க வேண்டிய அற்புதமான படம்.

மல்லி

இந்தப் படத்தைப் பற்றி பலருக்கு அறிமுகம் தேவையில்லை. சந்தோஷ் சிவனின் இயக்கத்தில் அருமையாக இருக்கிறது படம். காட்டுவிலங்குகள் மற்றும் இயற்கை மீதான நேசத்தை மல்லி எனும் சிறு மலைவாசிக் குழந்தை மூலம் அருமையாக விளக்கியுள்ளார்.

ஆயிசா

இரா. நடராசனின் புகழ்பெற்ற கதை இங்கு திரைப்படமாக கிடைக்கிறது. ஒவ்வொரு ஆசிரியரும் அவசியம் பார்க்க வேண்டிய படம். அறிவியல் மனப்பான்மையுடன் உள்ள ஒரு சிறுமிக்கு ஆசிரியர்களின் புரிந்து கொள்ளாமையும், அடக்குமுறைகளும் எவ்விதமெல்லாம் இடர்களை ஏற்படுத்துகின்றன என சொல்லிச் செல்லுகிறது. நம்மால் பதில் சொல்ல இயலாத பல கூர்மையான கேள்விகளை நம்முன் வைக்கிறது இப்படம்.

நாம் உதாரணத்துக்காக சில படங்களை இங்கே சொல்லியிருக்கிறோம். இது போன்ற பல அருமையான படங்களை CFSI வழங்குகிறது. அவசியம் இவற்றை வாங்கி உங்கள் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் காண்பியுங்கள். நிச்சயம் அவை குழந்தைகளை மகிழ்விக்கக் கூடியதாக இருக்கும்.

வலைத்தள முகவரி- http://cfsindia.org

நாம் CFSI யின் படங்கள் அனைத்தையும் வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில்  சென்னை CFSIக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்கு, அவர்கள் படங்களின் விலைப்பட்டியலை அனுப்பியிருக்கிறார்கள். உங்கள் பார்வைக்காக இத்துடன் விலைப்பட்டியலை இணைத்துள்ளோம்.

நீங்கள் டிவிடிக்களை அஞ்சல் வழியிலோ, அல்லது CFSI யின் சென்னை கிளையில் நேரடியாகவோ பெற்றுக் கொள்ளலாம்.

முகவரி-

CHILDREN,S FILM SOCIETY INDIA,

162(6) Santhome High Road,

Mylapore- Chennai-600 004

Telefax:044-24981159

mail: cfsichennai@gmail.com

மேற்கண்ட படங்களை நமக்கு அறிமுகப்படுத்திய, தந்துதவிய நண்பர் ரவிக்குமார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

2 thoughts on “சிறந்த குழந்தைகள் திரைப்படங்களை வழங்கி வரும் CFSI

Leave a comment